சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டு சில்லறை வியாபாரிகள் சந்திக்கும் பிரச்னைகளை எடுத்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், "தமிழ்நாடு அரசு பீடி, சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் சில அரசு அலுவலர்கள் பெட்டிக்கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் போன்றவற்றை கைப்பற்றி இரண்டாயிரம் முதல் இருபதாயிரம் வரை அபராதம் விதிக்கிறார்கள். அரசு அலுவலர்களின் இந்த அராஜகப்போக்கு சில்லரை வியாபரிகளை கோபமடையச் செய்கிறது.
பீடி, சிகரெட்டு உடல் நலத்திற்கு தீங்கானது தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி விற்கக் கூடாது என்றால் பீடி, சிகரெட் விற்பனைக்கு அரசு தடை விதிக்கட்டும். தற்போது இருக்கிற அரசு நமது கலாச்சாரம் சார்ந்த சில்லறை வணிகத்தை ஒழித்துக்கட்டப் பார்க்கிறது. மேலும் ஆன்லைன் வணிகத்தின் மூலம் வெளிநாட்டு கம்பெனிகளை மத்திய, மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன.
அந்நிய குளிர்பானங்கள், குளியல் சோப்புகள் வாங்குவதை தவிர்த்து மக்களும் உள்ளூர் வணிகர்களுக்கு உதவ வேண்டும். மன்மோகன் சிங் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டார்கள். தற்போது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கதவே வேண்டாம் என்று கழட்டி விட்டார்கள்” என்று தெரிவித்தார்.