தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 8:55 AM IST

ETV Bharat / state

சமாதானத் திட்டம் நிறைவேற்றம்; வணிகர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா - விக்கிரமராஜா அறிவிப்பு!

Samathana scheme: சமாதானத் திட்டத்தை நிறைவேற்றி தந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

samathana scheme
சமாதானத் திட்டம் நிறைவேற்றம்

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகா்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதானத் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். மேலும், சுமாா் ஒரு லட்சம் வணிகர்களுக்கான வரி நிலுவையை ரத்து செய்து, அதற்கான சான்றுகளை வழங்கும் நடைமுறையையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சாா்ந்த 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை எளிதாக வசூலிக்கும் வகையில், 1999ஆம் ஆண்டு சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வணிகா்களின் நீண்ட கால வரி நிலுவைகளை எளிய முறையில் வசூலிக்கும் பொருட்டு, சமாதானத் திட்ட சட்டமுன்வடிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தால், சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கான வரி நிலுவைகளை வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வரி நிலுவைகளை வைத்திருக்கும் வணிகர்கள், 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். வரி விதிப்பு ஆண்டில் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவான வரி, வட்டி, அபராதத் தொகை வைத்திருப்பவர்கள், மேலும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளனவா்கள் என நிலுவை வைத்துள்ள வணிகா்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

அவா்களில் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக நிலுவை வைத்துள்ள வணிகர்களின் நிலுவைத் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்த நிலையில் அந்த சமாதானத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் நிலுவைத் தொகை வைத்துள்ள வணிகர்களில் 10 பேருக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்களை அளித்தார்.

தொடர்ந்து ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் நிலுவை வைத்துள்ள வணிகர்களின் 1,002 சொத்துக்கள் வணிக வரித்துறையால் பிணைக்கப்பட்டுள்ளன. வரி நிலுவை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதால், அந்த சொத்துக்களும் வணிகர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் சமாதானத் திட்டத்தை நிறைவேற்றி தந்திருக்கிறார். சமாதானத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர், வணிகர்களுக்கு முழுமையான தீபாவளியை கொடுத்து இருக்கிறார்” என தெரிவித்தார்.

மேலும். “முதலமைச்சர் இத்திட்டத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாது, அதற்கான சான்றுகளையும் வழங்கி இருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம். அந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் வணிகர்கள் பயன் பெற உள்ளனர். அதன் மூலமாக அவர்கள் குடும்பத்தினரும் பயன்படுகிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 321 நாட்களாக தொடரும் போராட்டம்; அமைச்சர் அன்பில் மகேஷ் காரை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details