சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்தநிலையில், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் இன்று (ஜன.27) வெளியிட்டுள்ளது. அதன்படி:
- வெப்பமானி மூலமாக காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், ஆறு அடி தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- கரோனா பரவலை தடுக்க மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பார்.
- வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப் பெட்டி சாதனங்கள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தப்படும் மை, படிவங்கள் மற்றும் உரைகள் ஆகியவை கிருமி நீக்கம் செய்யப்பட்ட பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.
- வேட்பாளர்கள் அதிகபட்சமாக மூன்று ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை செய்யலாம்.
- வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பிரச்சாரத்தின்போது துண்டுச் சீட்டுகள் வழங்கும்போது முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயம்.
- கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை.
- பிரச்சாரம், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் தனிப்பட்ட கட்சி பிரமுகர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் 2005இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 1400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும்.
- தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 1% சோடியம் ஹைபோ குளோரைடு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்றி வாக்காளர்கள் வரிசையில் நிற்க குறியீடுகள் வரையப்பட வேண்டும்.
- வாக்குச்சாவடியில் 200 மீட்டருக்கு அப்பால் பூத் ஸ்லிப் வழங்க தனித்தனியே இடவசதி அமைத்திட வேண்டும்.
- வாக்குச்சாவடிக்குள் நுழையும் ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை மற்றும் சானிடைசர் வழங்க வேண்டும்.
- வாக்காளரை உறுதி செய்ய மட்டுமே தேர்தல் அலுவலர், வாக்காளரின் முகக்கவசத்தை கீழிறக்க சொல்ல வேண்டும். மற்ற நேரங்களில் வாக்காளர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும்.
- வாக்குப்பதிவு முடிவடைந்த பின் வாக்குப்பெட்டிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை முறையாக கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் செய்தபின் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முறையான கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் கவனமுடன் கொண்டு செல்ல வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகபட்சம் ஏழு மேஜைகள் மட்டுமே அமைக்கபட்டு, தகுந்த இடைவெளிப் பின்பற்றும் வகையில் விசாலமான அறைகள் அமைக்கப்பட வேண்டும்.
- முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 24 மணி நேரமும் கண்காணிக்க 45 பறக்கும் படை