சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுப் பணிகளில் சேர்வதற்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசுப் பணியில் சேர்வதற்காக தேர்வு நடத்தும் அனைத்து தேர்வு முகமைகளும் தமிழ் தகுதித் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவலர் தேர்வுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தமிழ் மொழி தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஏற்கெனவே நடத்தப்படும் காவலர் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும்.
தமிழ் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் காவலர் பணியில் தேர்ந்தெடுப்பதற்கு கணக்கில் கொள்ளப்படமாட்டாது.
இந்தத் தேர்வு தமிழ் தெரிந்த தகுதியான நபரா எனத் தெரிந்து கொள்வதற்கான தேர்வு மட்டுமே என்றும், இதன் மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட காவலர் தேர்வுக்குச் செல்ல முடியும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நவீன இந்தியாவுக்கான பட்ஜெட் இது - பிரதமர் மோடி பெருமிதம்