போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலக பழைய கருத்தரங்கு கூடத்தில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ” தீபாவளி பண்டிகை காலத்தில் சென்னையில் ஐந்து பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி ஆகிய பகுதிகளுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொலைத் தூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 23ஆம் தேதி சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படும். சென்ற ஆண்டு தீபாவளிக்கு அரசு பேருந்துகளின் மூலம் சுமார் ஏழு லட்சம் பேர் பயணம் செய்தனர்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அரசு பேருந்துகள் சுங்கச் சாவடிகளில் சீராக இயங்க தனி வரிசை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை காலங்களில் கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வர கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.