தமிழ்நாடு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று (அக்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பது குறித்த பதிவேடுகள் இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
மேலும், கோயில்களில் புராதன நகைகள் எவை என்பது குறித்தும், கோயிலுக்கு தேவையான நகைகள் எது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில்களில் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும், நகைகளை தணிக்கை செய்யாமல் உருக்கக்கூடாது என வாதிடப்பட்டது.