சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்திருந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் பேட்டியளித்தார். அப்போது, “முதலாவதாக தமிழ்நாட்டில் பெருவாரியான ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தொடங்கினார்.
பல்வேறு தீர்மானங்கள்
அதன்பின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், "அடுத்து எங்களது வாழ்வாதார கோரிக்கை ஆசிரியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்து இருக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோதும்கூட, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5.50 லட்சம் ஆசிரியர்களின் பிரச்சினை என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் கருத்தில்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தச் செயற்குழு வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.