சென்னை:உக்ரைனிலிருந்து டெல்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பதற்கான மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நேற்று(பிப்.5) டெல்லி சென்றனர்.
மீட்புப் பணிக்கான ஆலோசனை
மேலும், பிப்.5-அன்று காலை 11 மணிக்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டு மக்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து, குழுவினர் , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் டெல்லியில் தங்கியிருந்து மாணவர்களின் மீட்புப்பணியை கண்காணிக்கும் பொருட்டு இன்று (6.3.2022) தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்குத் தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு, தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.