சென்னை: நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த தேசிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்து வந்த தமிழக அரசு, தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளனர். தற்போது அறிக்கைகளை எழுத்து வடிவமாக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கான கருப்பொருள்களையும் வடிவமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக்குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் இன்று(ஏப்.13) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறும்போது, "தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் பெற்றக் கருத்துகளைத் தொகுத்து வருகின்றனர். அந்தப் பணியை முடிப்பதற்கு ஏப்ரல் மாதம் வரையில் தேவைப்படும் என உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். அவர்கள் பிற துறைகளில் இருப்பதால், இந்த அவகாசம் தேவைப்படுகிறது.