சென்னை:அரும்பாக்கத்தில் திருநங்கைகள் நடத்தும் 'நம்ம கபே' சிற்றுண்டி உணவகத்தை மா. சுப்பிரமணியன் இன்று (பிப்ரவரி 21) திறந்துவைத்தார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அவர், "'நம்ம கபே’ 20ஆவது கிளை முற்றிலும் வித்தியாசமாக திருநங்கைகள் நடத்துவதற்கு உரிய அமைப்பாக மாற்றி அவர்களுக்கு இந்தக் கிளை ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஆண்பாலை குறிக்கின்ற வகையில் ‘திரு’ என்பதையும், பெண்பாலை குறிக்கிற வகையில் நங்கை எனச் சேர்த்து ‘திருநங்கை’ எனப் பெயர் சூட்டி அந்தச் சமூகத்திற்குப் பெரிய மரியாதையை உருவாக்கினார்.
விரைவில் பூஜ்ஜிய எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்து ஒட்டுமொத்த இந்திய மக்கள் திருநங்கைகள் மீது அக்கறைகொள்கிற விசயத்தை முன்னெடுத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துக்கொடுத்து அவர்களை தமிழ்நாட்டில் சிறப்பித்துவருகிறார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகள் அனைவரும் இதுபோன்ற புதிய, புதிய உத்திகளுடன்கூடிய தொழில்முனைவோராக வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையினால் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மிக விரைவில் பூஜ்ஜிய எண்ணிக்கையை அடையும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 92 விழுக்காட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி 72 விழுக்காட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்
இந்தியாவில் 175 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தைப் போல 10 கோடி தவணை தடுப்பூசி என்ற இலக்கு வருகிற வாரங்களில் எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வரும் சனிக்கிழமை 23ஆவது மெகா தடுப்பூசி முகாம், தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளன. இதனைப் பயன்படுத்தி 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் செலுத்திக்கொள்ளுங்கள்.
நாள்தோறும் கரோனா தடுப்பூசி மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் பயன்படுத்தி தமிழ்நாட்டில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் தடுப்பூசி ஒன்றுதான் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உதவும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அறநிலைய ஊழியர்களை அயல்பணியில் நியமித்ததில் சட்டவிரோதம் இல்லை'