சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.18) 9ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முகாம், டெங்கு சிறப்பு முகாம், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை 10ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 75 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
36% இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்
74 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 36 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். நீண்ட நாள்களாக தடுப்பூசி (Covid 19 vaccine) செலுத்தும் பணியை செய்து கொண்டிருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போக முடியாமல் உள்ளது. சகோதரிகளாக உள்ள செவிலியர்கள் தாங்கள்படும் கஷ்டங்களை தாங்கிக்கொண்டு, விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க வேண்டும்.