தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம்! - மாணவர்களுக்கு புத்தகம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தீவிரம்
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தீவிரம்

By

Published : Jul 30, 2020, 8:56 PM IST

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அரசால் ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, படிக்கும் அனைத்து மாணவர்களும் 2019-20ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்புகள் வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வழங்க வேண்டும்.

முதலில் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வழங்க வேண்டும்.

அதனைப் பெறுவதற்காக வரும் மாணவர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளியின் நுழைவு வாயிலில் கூட்டம் சேராமல், பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என கால அட்டவணை பின்பற்ற வேண்டும்.

கோவிட்-19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மாணவர் எவரேனும் இருப்பின், அவர்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட கால அளவு முடிந்த பிறகு, பள்ளிக்கு வரவழைத்து புத்தகங்கள் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 1,6,9,11ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்த பின்னர், புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details