தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் மூலம் 71 ஆயிரத்து 280 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினர். மேலும் அரசு சார்பில் இலவச சீர்வரிசைகளும் உணவுகளும் வழங்கப்பட்டன.
மாவட்டம் வாரியாக பார்க்கலாம்:
திருப்பூர்: உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக மாநகர ஆணையர் விஜய கார்த்திகேயன் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
நாகப்பட்டினம்:குத்தாலம் ஒன்றியத்தில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் 160 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பங்கேற்று சேலை, வளையல், சீர்வரிசைகளை வழங்கினர்.
சேலம்: சீலநாயக்கன்பட்டியில் சமூக நலத்துறை சார்பில் 320 கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டத்திற்குள்பட்ட பகுதியிலுள்ள 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு எம்எல்ஏ சேகர் தலைமையில் சேலை, பூ, பழம், தட்டு உள்ளிட்ட சீர்களை வழங்கி வளைகாப்பு நடைபெற்றது. மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் ராஜேஸ்வரி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் கலந்துகொண்ட 320 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராஜன் செல்லப்பா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்; இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழ்நாடு மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. பெண் கருவுற்றது முதல் குழந்தை பெற்றெடுக்கும்வரை பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. குழந்தைகள் படிக்கும் காலத்திலும் சீருடைகள், பாடப்புத்தகங்கள், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி என்று எத்தனையோ நல்ல திட்டங்களை எங்கள் (அதிமுக) அரசு வாரி வழங்கிவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் அரசு வழக்கறிஞர் ரமேஷ், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர்: திருவலாங்காடு, திருத்தணி தாலுகாக்களில் மொத்தம் 480 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி தாலுகாவில் எம்எல்ஏ நரசிம்மன் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டு வழங்கி ஆசீர்வாதம் செய்தார்.
திருவலாங்காடு திட்ட அலுவலர் நதியா, புனி மாங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா தலைமையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி மதிய உணவு வழங்கப்பட்டது.
அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி: ஏராளமான கர்ப்பிணிகள் பங்கேற்பு! அரியலூர்: திருமானூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட ஆறு ஒன்றியங்களிலும் சுமார் 900 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மகபேருக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.
திருச்சி: கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 320 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை தட்டு வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சமூக நலத்துறை அலுவலர்கள், கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள், குடும்பத்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 42 இடங்களில் ஆயிரத்து 680 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
தருமபுரி: எட்டு வட்டாரங்களில் ஆயிரத்து 480 கர்ப்பிணி வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கிராமப்புறங்களில் ஏழை, எளிய தாய்மார்கள் பயன்பெற வேண்டும் என்ற தாய் உள்ளத்தோடு தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திவருகிறது.
அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தினசரி இணை உணவாக 165 கிராம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுவருகிறது. இதை விருப்பத்திற்கேற்றவாறு உருண்டையாகவோ, கொழுக்கட்டையாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு பயன்பெற வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.