சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர், கேரளாவில் இருந்து வந்த ஒருவர் உள்பட 98 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு சதவீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. கேளம்பாக்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் இதுவரை 118 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று மே 31ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 340 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர், கேரளாவில் இருந்து வந்த ஒருவர் உள்பட 98 பேருக்கு புதியதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து 6 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்து 17 பேருக்கு பரிசோதனை செய்ததில், 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதுள்ளது. கரோனா தொற்று பாதித்தவர்களில் தற்போது 542 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.