சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தை பொறுத்தவரையில், பாதுகாப்புப் பணியில் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு அரசின் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் தரப்பில், கடந்த 2022ஆம் ஆண்டு விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்கொலை காரணமாக ஏற்பட்ட மரணங்கள், போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு விபத்து மற்றும் தற்கொலை காரணமாக 2,066 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம் அதிகமாகும். ஏனென்றால் கடந்த 2021ஆம் ஆண்டு 1,535 பேர் உயிரிழந்திருந்தனர். குறிப்பாக ரயில்வே இருப்புப் பாதைகளை விதிகளை மீறி கடக்கும்போதும், விபத்து காரணமாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 35 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு 1,313 பேரும், கடந்த ஆண்டு 1,856 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கரோனா காலக்கட்டத்தில் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு ரயில்வேக்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 210 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 222 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.