சென்னை: தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயல் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இணைந்து அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகிறது.
இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. தடை செய்யப்பட்ட பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலி எதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலி எதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது, 'நெய்யப்பட்ட பைகள்' அல்லது 'ரஃபியன் பைகள்' என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகளை விற்பனையாளர்கள் கடைக்காரர்கள் மற்றும் ஜவுளி கடைகள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி முதலியவைகளை விநியோகிக்க உபயோகிக்கப்படுகின்றது. இதுபோன்ற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறி விடுகிறது.