சென்னை: 23-வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி ஜனவரி 9 முதல் 13 வரை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. சென்னை, இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று (13.01.2023)
நடைபெற்ற நிறைவு விழாவில், வெற்றி பெற்ற காவல்துறை அணிகளுக்கும், வீரர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பதினோரு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் இப்போட்டிகளில் 24 மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை அணிகளும், 8 மத்திய ஆயுதப்படை அணிகளும், என மொத்தம் 32 அணிகளின் 673 துப்பாக்கிச் சுடும் வீரர்கள் பங்கு பெற்றனர். 13 பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
கைத்துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அதிகப் புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பெற்ற தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஆர்.சதி சிவனேஷ் அவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கி கௌரவித்தார். மத்திய பாதுகாப்பு படையைச் சேராத மாநில காவல் துறையைச் சேர்ந்த ஒரு வீரர், இப்பதக்கத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
24 மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை அணிகளில் மொத்தம் 2000 புள்ளிகளுக்கு 1761 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதல் இடத்தையும், 1725 புள்ளிகள் பெற்று ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 1693 புள்ளிகள் பெற்று ஒடிசா மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஐந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு காவல்துறை முதலிடத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு அணி வீரர்கள் இப்போட்டியில் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுவதில் முதலிடம் 24 மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை அணிகள் மற்றும் 8 மத்திய ஆயுதப்படை அணிகள், என மொத்தம் 32 அணிகளில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 1814 மதிப்பெண்கள் பெற்று அசாம் ரைஃபிள்ஸ் தட்டிச் சென்றது. தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் இடத்தையும், சி.ஆர்.பி.எஃப் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடிப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.
ரைபில் சுடும் பிரிவில் சிறந்த அணிகளாக அசாம் ரைபிள் முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை இரண்டாவது இடத்தையும், ஒடிசா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கைத்துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறந்த அணிகளாக அசாம் ரைபிள் முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் இந்திய-திபெத்திய எல்லை காவல் படை (Indo-Tibetan Border Police Force) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
கார்பைன் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் அதிகப் புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற்ற எல்லைப் பாதுகாப்பு படைக் காவலர் ரஞ்சித் ஹண்டிக் அவர்களுக்கு பதக்கத்தை வழங்கி கௌரவித்தார், முதலமைச்சர். கார்பைன் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சிறந்த அணிகளாக இராஜஸ்தான் மற்றும் சி.ஆர்.பி.எப் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டன, தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், அசாம் ரைபில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த நிறைவு விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சேது சமுத்திரம் திட்டத்தை கைவிடுங்கள் - பூவுலகின் நண்பர்கள் அரசுக்கு கோரிக்கை