சென்னை: தமிழ்நாடு காவல் தலைமையிடஇணை ஆணையர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் அருங்காட்சியகத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு விருந்தினராக சமையல் கலை நிபுணரும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரபலமுமான தாமு பங்கேற்றார்.
இந்தத் திருவிழாவில் நமது பாரம்பரியம் மற்றும் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பெங்காலி உள்பட பல வடமாநில உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளது. அருங்காட்சியகத்தை கண்டு களிக்கவும், உணவுத் திருவிழாவில் உண்டு மகிழவும் அனைத்து பொதுமக்களுக்கும் நுழைவுக் கட்டனம் ஏதுமின்றி இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது.
சமையல் நிபுணர் தாமு, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்னர் அரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தாமு, “இந்தத் திருவிழாவில் 90 சதவீதம் பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் சமையல் கலைஞர்கள், தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த ஒரு நல்வாய்ப்பாக அமைந்து உள்ளது.
போலீஸ் என்றால் அனைவருக்கும் பயம்தான் நினைவில் வரும். ஆனால், நான் இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது. ‘காவல் துறை உங்கள் நண்பன்’ எண்பதற்கிணங்க, காவல் துறையினர் பல்வேறு மக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது என்பது பெரிய விஷயம். மக்களுக்காக காவல் துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து உதவி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் தலைமையிட இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, “தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழ்நாடு காவல் துறை சார்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது இந்த உணவுத் திருவிழா இன்று மட்டும் நடைபெறும். இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் 15 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பெங்காலி மற்றும் பல வடமாநில உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குடும்பங்களும், பல்வேறு பொதுமக்களும் இங்கு வருகை புரிந்து தங்களது இனிய நாளை அருமையாக கழித்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:வீட்டு இணைப்பு மின் கட்டணம் உயர்த்தப்படாது - முதலமைச்சர் திட்டவட்டம்