சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகள் கலாச்சாரத்தை அழிக்க காவல்துறை சார்பில் பல்வேறு யுக்திகளை கையாண்டு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கொடூர சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்யும் சம்பவங்களும், அதன் பிறகு செயின், செல்போன் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளிகள், மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடிக்கச் செல்லும் போது, ஆயுதங்களால் போலீசாரை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக குற்றவாளிகளை பிடிக்கும் போது காவல்துறையினர் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்லச் வேண்டும் எனவும் குற்றவாளிகள் தாக்கும் போது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது எனவும் டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை பிடிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 5 பேரை தமிழக போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது இரு குற்றவாளிகள் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதால் உதவி ஆய்வாளர் இருளப்பன் இரண்டு பேரையும் துப்பாக்கியால் காலில் சுட்டு கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி திருச்சியில் ரவுடிகளிடம் நகைகளை மீட்க சென்ற இடத்தில், போலீசாரை ரவுடிகள் அரிவாளால் தாக்கிய போது தற்காப்புக்காக ஆய்வாளர் மோகன் அவர்களை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தார். அதற்கடுத்தாக கடந்த 22ஆம் தேதி அயனாவரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கிவிட்டு சென்ற வழக்கில் ரவுடி சூர்யாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது, இரண்டு காவலர்களை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்றார். அப்போது எஸ்.ஐ மீனா தற்காப்புக்காக ரவுடி சூர்யாவை காலில் சுட்டு பிடித்தார்.