சென்னை:கடந்த மே 28ஆம் தேதி இரவு 11 மணி அளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகில் ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது முன்னால் சென்ற கனரக வாகனத்தின் ஸ்டெப்னி டயர் கழன்று விழுந்து காரின் முன்பக்க கதவு சேதம் அடைந்ததாக புகார் எழுந்தது.
அதேபோல் அன்று இரவு 10.45 மணி அளவில் காரில் சென்ற நபரின் கார் கண்ணாடி மீது ஒருவர் கல் எரிந்து சேதம் அடைந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அவசர எண் 100ஐ தொடர்பு கொண்டபோது, அப்பகுதியில் இணைப்பு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
மேலும், செங்குறிச்சி சோதனைச் சாவடி அருகே செல்லக் கூடிய கார்களை அடிக்கடி குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க முயலும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்வதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டது வந்தது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் கொள்ளை அடிக்க முயல்வதாக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, இந்த சம்பவங்கள் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.