சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் இடத்தில் நேற்று (பிப்.2) எருதுவிடும் விழா நடைபெறும் என கடந்த 20 நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன. ஆனால், இதற்காக முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, காவல் துறையினர் அனைவரையும் விரட்டினர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடுத்ததால், காவல் துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அதேநேரம் கல்வீச்சு தாக்குதலால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதமடைந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கற்களைக் குவித்த இளைஞர்கள், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றனர். இதனிடையே எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இருப்பினும், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து செல்லாத இளைஞர்களால் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்திருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “சமூக வலைதளத்தில் பரவுவது போன்ற எந்த தடையும் தமிழ்நாடு காவல்துறை விதிக்கவில்லை. அவதூறு பரப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் - போலீசார் மீது தாக்குதல்