கரோனா தொற்று இரண்டாவது அலை சுனாமி போல அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தாலே கரோனா தொற்றை தடுக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24ஆம் தேதியன்று காலை 4 மணி வரை, தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 10 ஆயிரம் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 200 இடங்களில் சட்டம்- ஒழுங்கு காவல்துறையினரும் , 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் சுமார் 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நடவடிக்கையை காவல்துறை ஏன் கடுமையாக்கவில்லை- ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி முழு ஊரடங்கு தொடங்கிய முதல் நாளன்று மட்டுமே காவல்துறையினர் சென்னையின் பல பகுதிகளில் வாகன சோதனையை மேற்கொண்டு அத்துமீறி செல்பவர்களை பிடித்தனர். ஆனால் மறு நாளிலிருந்து காவல்துறையினரின் வாகன சோதனை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து சர்வ சாதாரணமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. 318 வாகன சோதனை சாவடிகளை அமைத்திருந்தாலும், அத்துமீறும் வாகனங்களை தடுப்பதும், வழக்கு போடுவதும் குறைவாகத்தான் காணப்படுகிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் குறைந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. சிறிய சாலைகளிலும் தெருக்களிலும் பொதுமக்கள் வெளியே சுற்றுவது சாதாரணமாக இருக்கிறது. இதனை காவல்துறை தடுக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது, பொதுமக்களிடம் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற டிஜிபி திரிபாதியின் உத்தரவே. வாகன சோதனையில் வாகனங்களை நிறுத்தினால் மருத்துவத் தேவைக்காக செல்வதாகவும் உடல் நிலை சரியில்லை என்றும் வாகன ஓட்டிகள் கூறி வருவதால் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது வரக்கூடிய வாகனங்களை காவல்துறையினர் முழுவதுமாக சோதனை செய்த பின்பே அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய தேவையின்றி வரக்கூடிய வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். சாலைகளில் பொதுமக்கள் சுற்றினாலும் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு வழக்குகளை வாபஸ் பெற்று அரசு அறிவித்தது. மீண்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் கொஞ்சம் கடுமையானால் மட்டுமே கரோனா தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என காவல்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் 3,000க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் காவல்துறை கடும் நடவடிக்கையை கையில் எடுக்க யோசிப்பதாகக் கூறப்படுகிறது. "ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்தால் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுமோ என அரசு அஞ்சக்கூடாது. அத்தியாவசியத் தேவையின்றி சுற்றக்கூடிய பொதுமக்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலை மக்களே புரிந்துகொண்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் எனவும், முழு ஊரடங்கில் பொதுமக்களை வஞ்சிக்ககூடாது என்ற நல்லெண்ணத்தில் கட்டுப்பாடின்றி அரசு விடுவதாக ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கரோனா பரவல் அதிகளவில் உள்ளதால் உறவினர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள், உணவுகள் வாங்கி செல்கின்றனர். கரோனா பாதிக்கப்பட்ட நோயாளியே இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தால் காவலர்களுக்கு கரோனா பரவும் நிலை ஏற்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - அமைச்சர் பி.கே. சேகர் பாபு