சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,03,385 பேர் எழுதினர். அவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று 94.03 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 4,21,013 மாணவிகளில் 4,05,753 மாணவிகள் என 96.38 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,82, 371 மாணவர்களில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 91.45 சதவீதமாக உள்ளது. தேர்வு எழுதி இருந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒரு மாணவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2021-22 ம் கல்வியாண்டில் படித்து தேர்வு எழுதிய 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாணவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதமாக இருந்தது. 7,533 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மே 2022 ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957 என இருந்தது. இந்தாண்டு 32,501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 4,398 மாற்றுத்திறானாளி மாணவர்களில் 3923 பேர் தேர்ச்சி பெற்று 89.20 சதவீதமாக தேர்ச்சி உள்ளது. தேர்வெழுதிய 90 சிறைவாசிகளில் 79 பேர் தேர்ச்சி பெற்று 87.78 சதவீதமாக உள்ளது.
அதிகம் தேர்ச்சிப்பெற்ற 3 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் 96.45 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடமும், 95.90 சதவீதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாமிடமும், 95.43 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 298. அவர்களில் 47,736 மாணவர்கள் வரவில்லை. தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்கள் 23,753 அவர்களில் 2010 பேர் தேர்வு எழுத வரவில்லை. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.