தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2023, 8:02 PM IST

ETV Bharat / state

‘தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும்’ - பேராசிரியர் ஜவகர் நேசன்

தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றாமல் தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும்; அது நிறைவேறும் வரையில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும்; நான் விலகியதால் தேசிய கல்விக்கொள்கை 2020க்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக என பேராசிரியர் ஜவகர் நேசன் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டிற்கான தனித்துவம் வாய்ந்த மாநில கல்விக்கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது. அக்குழு கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தக் குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜவகர் நேசன் உயர்நிலைக் குழு தேசிய கல்விக்கொள்கையை ஒட்டி மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு குழுவில் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து ஜவகர்நேசன் செய்தியாளர்களிடம் தனது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உயர்நிலைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் மறுப்பு தெரிவித்து, தனது கருத்துகளை வெளியிட்டார். இந்த நிலையில், அவரின் கருத்துகளை மறுத்தும், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், பேராசிரியர் ஜவகர் நேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கொள்கை உயர்நிலைக் குழுவின் தலைவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை. அவை எனது குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில்லாதவை.

குழுவின் தலைவர் ரகசியமாகவும், ஜனநாயக முறையில் இல்லாமலும் செயல்படுகிறார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்பதுதான் முக்கியப் பிரச்னை. இதனால், தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையிலும், பெரும் நிறுவனங்கள் மற்றும் தனியார்மயத்தை மையப்படுத்தியும் மாநில கல்விக்கொள்கை தயாராகி வருகிறது. இதற்கான ஆதாரங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 200 பக்கங்களில் அறிக்கை அளித்துள்ளேன்.

தேசியக்கல்விக்கொள்கை 2020 அமல்படுத்துவதற்குப் பல்வேறு நிகழ்வுகள் குழுவில் நடைபெற்று வருகின்றன. மேலும் குழுவில் ஆலோசனை செய்வதற்கு தலைவர் உயர்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொடர்பியல், சுற்றுலா மற்றும் கலாசாரம், இந்து சமய அறநிலையத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை, விவசாயம் ஆகியத்துறைகளில் முதன்மைச் செயலாளர், செயலாளர் நிலையில் உள்ளவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.

மேலும், குழுவில் இவர்களுடன் விவாதிக்கவும் எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், குழுவின் உறுப்பினர்களாக இவர்களை அரசின் அனுமதியுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் கூறினேன். இந்தச் செயல் தமிழக அரசின் அரசாணையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்மாறாக அமைந்துள்ளது. இதுதான் குழுவில் இருந்து நான் வெளியேறியதற்கு முக்கியக் காரணம். குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவுகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் எதிராக குழுவின் தலைவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதுதொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். துணைக்குழு அமைப்பு தொடர்பாக என் மீது குழுவின் தலைவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. தமிழ்நாடு மக்களின் விருப்பங்கள் மாநில கல்விக்கொள்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், உயர்நிலைக் குழுவின் செயல்பாடு தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்து வருகிறது. இதை என்னால் முடிந்த அளவுக்கு எதிர்த்தேன்.

இதற்காக நான் கொடுத்த விலைதான் உறுப்பினர் பதவியில் இருந்து விலகல். எனது பதவி விலகலுக்குப் பிறகு, மாநில கல்விக்கொள்கை தேசிய கல்விக்கொள்கையை ஒட்டி அமைந்திருக்காது என்ற உறுதியை குழுவின் தலைவர் அளித்துள்ளார் என கருதுகிறேன். அவர் இந்த உறுதிமொழியை காப்பார் என்று நம்புகிறேன். தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'வாத்தி ரெய்டு...' உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை - எச்சரித்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details