சென்னை:ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு கவிஞர் வைரமுத்து பேசும்போது, 'காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து குறித்த முதல் மாநாட்டை நடத்தும் மருத்துவர்களை வணங்குகிறேன். பேராசிரியர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் சொல்லிச் சென்ற ஒரு வாசகத்தை முதலமைச்சர் வாய்விட்டு, அதை உற்று கவனித்து ரசித்தார். சாதிப்பது என்பதும் தொண்டு செய்வது என்பதும் ஆட்சி அதிகாரம் செய்வதும் முதலமைச்சருக்கு மரபணுவிலுள்ளது என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார். நாங்கள் நெகிழ்ந்து போனோம்.
முதலமைச்சர் முதலில் கல்வி, பின்னர், மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார். அதனால் தான் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து, அதற்கானப் பணிகள் இரவு பகலாக பணி நடக்கின்றன. அதனை கண்காணித்து வருகிறார்.
எய்ம்ஸ் எய்ம்ஸ் என கூறுகின்றனர். அது எப்போது வரும் எனத் தெரியாது. எய்ம்ஸை எட்டும் முன்னர், பன்னோக்கு மருத்துவமனை என்னும் தன் எய்மை முதலமைச்சர் எட்டி விடுவார். முதலமைச்சர் பதவி ஏற்கும் போது, நோய் காலமாக இருந்தது. நோயை எப்படி வெல்வது என்று காட்டினார். கரோனா காலத்திலும் தன் திறனை பயன்படுத்தி வென்றவர்.
நோயாளிக்கும், தங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீங்கள் தமிழால் குறைக்கிறீர்கள். நோயாளிக்கு தமிழில் சொல்லிக் கொடுங்கள், கற்றுக் கொடுங்கள். காதில் உள்ள செவி வளையம் காக்ளியர் என்பது தான் கேட்கப் பயன்படும். காதின் மடல் தான் காது என நினைக்கின்றனர். அதன் உள் இருக்கும் செவியை பாதுகாப்பதற்கான வளையம் தான் செவி மடல். தமிழில் இதற்கு உள் செவி, அகச்செவி என கூறுவதா என கலைச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.