தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்ட குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், பாஜகவின் அமைப்புத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக தீர்ப்புக்குப் பின் நாட்டில் எங்கும் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படவில்லை. கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும். பாஜக தலைவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென்றால் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இல. கணேசன் செய்தியாளர் சந்திப்பு ’உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தொடரும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இருப்பினும், பாஜக எல்லா இடங்களிலும் தனித்து நிற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் அதைச் சந்திக்கும் அளவுக்கு தொண்டர்களுக்கு நாங்கள் ஊக்கம் தந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் வருகின்ற 16ஆம் தேதி தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க:‘எங்களின் ஆதரவு ஸ்டாலினுக்குதான்!’ - அறிவாலயத்தில் திருநங்கைகள் பேட்டி