தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பேரிடர் காலமான தற்போது, வணிகம் சார்ந்த பால் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக்காரணமாக வைத்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய்க்கு அதிகமாகக் குறைத்து கொள்முதல் செய்கின்றன.
இதே தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக்கூறி பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய்க்கும் மேல் உயர்த்தின. ஆனால், தற்போது பால் விற்பனை ஆகவில்லை என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி கொள்முதல் விலையை, லிட்டருக்கு 15 ரூபாய்க்கு அதிகமாக குறைத்து பாலை கொள்முதல் செய்கின்றன.
இதனை தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பால் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி செலவினங்களைக்கூட ஈடுசெய்ய முடியாமல் அவதிப்பட்டுவரும் இச்சூழ்நிலையில், தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு, ஆவின் நிறுவனம் மட்டுமே தமிழ்நாட்டில் பால் கொள்முதல், விநியோகம் செய்வது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிவருவதோடு, ஆவின் நிறுவனத்திற்கான பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயம் செய்துவருகிறது. எனவே, தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு, கொள்முதல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் வாழ்வில் வசந்தம் வீசிட நியாயமான விலை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சீனத் தயாரிப்புகள் புறக்கணிப்படும் - தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை