சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (Tamilnadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited)டாம்ப்கால் தயாரித்துள்ள கூந்தல் தைலம், மூலிகை ஷாம்பு, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் ப்ளஸ், மூலிகை சோப் (பசுமை & வெண்மை) உள்ளிட்ட ஆறு அழகுசாதனைப் பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் சார்பில் 11 வகையான அழகு சாதனப் பொருட்கள் வரும் நிதி ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று சென்ற நிதி நிலை அறிக்கையில் சொல்லி இருந்தோம்.
11 பொருட்களில் முதற்கட்டமாக 6 வகையான பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை, இயற்கை முறையைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் எந்தவித பின் விளைவுகளும் இருக்காது. டாம்ப்கால் லாபம் ஈட்டும் அமைப்பாக உள்ளது. மூலிகைப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த அழகுசாதனப் பொருட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதவையாக இருக்கும்.
தனியார் கம்பெனிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இந்தப் பொருட்களைவிட 3 மடங்கு விலை அதிகமாக உள்ளது. அரசு சார்பில் தயாரிக்கப்படும் இவை கூடுதல் பாதுகாப்பானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் ஆசையைத் தூண்டி கூடுதல் விலைக்கு பொருட்களைக் கொடுத்து வருகிறது. நானே அதற்கு ஒரு உதாரணம் 1975ஆம் ஆண்டுகளில் அழகுசாதனப் பொருள் கண்டு மயங்காதவர் இருக்க முடியாது.