தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கிய 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு மதியம் 1:15 மணி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் கேள்வித்தாளைப் படிப்பதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்கள் தேர்வினை எழுதத் தொடங்கினர்.
இத்தேர்வை, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். அதேபோல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். பொதுத்தேர்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,012 ஆக அதிகரித்துள்ளது. தமிழ் வழியில் பயின்ற 4 லட்சத்து 54 ஆயிரத்து 367 பேருக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 3,330 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் மொழித் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதி முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த மாணவ, மாணவிகள் வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், எழுத்துப்பிழை இல்லாமல் சரியாக இருந்ததாகவும் கூறினர்.
32 மையங்களில் நடந்த தேர்வில் 268 ஆப்சென்ட்...
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 73 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 7 ஆயிரத்து 902 பேர் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 268.
எழுத்தர் உதவியுடன் தேர்வெழுதிய 38 மாணவர்கள்...
அரியலூர் மாவட்டத்தில் 88 பள்ளிகளைச் சேர்ந்த 3,805 மாணவர்கள் 4,781 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 546 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 35 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தேர்வின்போது ஏற்படும் முறைகேட்டைத் தடுப்பதற்காக 71 நபர்கள் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாவட்டத்தில் 421 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளித் துணை ஆய்வாளர் பழனிச்சாமி தெரிவித்தார். எழுத்தர் உதவியுடன் 38 மாணவர்கள் தேர்வெழுதினர்.
1,231 மாணவர்கள் பங்கேற்கவில்லை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத்தேர்வை 245 பள்ளிகளில் பயிலும் 13,291 மாணவர்கள், 14,569 மாணவிகள் என மொத்தம் 27,860 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 111 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கீழ்பென்னாத்தூர் வட்டம், மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று நடைபெற்ற தேர்வில் 1,231 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் தேர்வில் பங்கேற்காத 781 மாணவர்கள்:
நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை 20 ஆயிரத்து 269 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுப் பணியில், 1,350 அறை கண்காணிப்பாளர்கள், 85 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பத்து வினாத்தாள் மையங்களில், துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தேர்வில் 781 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதிரடி ஆய்வில் இறங்கிய திருச்சி கலெக்டர்...
கோவையில் 356 பள்ளிகளைச் சேர்ந்த 34,273 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று அனைவருக்கும் மொழிப்பாடம் தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அந்தந்தப் பள்ளிகளில் தேர்வு குறித்தும், தேர்வு அறையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கோவை மாவட்ட ஆட்சியர் ராதாமணி அதனை நேரில் சென்று ஆய்வு செய்தார். மொத்த மாணவர்களில் 1,506 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை கல்வி அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இத்தன பேர் தேர்வு எழுத வரலயா...
திருச்சி மாவட்டத்தில் 250 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 17,823 பேர், மாணவர்கள் 14,482 பேர் என மொத்தம் 32,305 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்வு நடைபெற்ற புனித ஜான் வெஸ்டரி பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆயிரத்து 728 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.