மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 2020 அறிமுகப்படுத்தியது. இந்தக் கல்விக்கொள்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. அதிமுக அரசு புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாகவும்; தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020இல் உயர் கல்வித் துறையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்கு உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா தலைமையில் குழுவை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்தது.
புதிய கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு கருத்து தெரிவிக்க சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ். பி.தியாகராஜன், துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா தலைமையிலான உயர் மட்டக்குழு நேற்று (செப் 22.) வீடியோ கான்பெரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை உயர் கல்வித் துறையில் அமல்படுத்துவது குறித்து மாநில அளவில் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மூன்று மண்டலங்களில் நாளை(செப் 24) இந்த கருத்துக்கேட்பு நடைபெறவுள்ளது.