சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 2.11 கோடி ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருள்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 14 வகை மளிகை பொருள்களை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
14 வகையான மளிகை பொருள்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முன்னதாக அவர் தனது தேர்தல் பரப்புரையின் போதும் இது குறித்து வாக்குறுதி அளித்திருந்தார்.
முதற்கட்டமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.முதலமைச்சரின் உத்தரவின்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, டோக்கனில் உள்ள அந்தந்த தேதிகளில் பொதுமக்கள் நிதியை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் கரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணையான 2000 ரூபாயை கருணாநிதியின் பிறந்தநாளன்றே வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.