தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது சமூக நீதியா? - நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு, மறுபுறம் அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது எந்த வகையில் சமூக நீதி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamilnadu
Tamilnadu

By

Published : Mar 2, 2023, 12:46 PM IST

சென்னை: டெல்லியில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளோடு உண்டு உறைவிட வசதியுடனும் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.

அரசுப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து, இந்த மாதிரிப் பள்ளிகளில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று(மார்ச்.2) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நாளை மறுநாள் மார்ச் 4ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால்தான், அத்தேர்வை தமிழக அரசும், பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி?

நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்கக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இந்த நுழைவுத் தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு ரூ.364 கோடி நிதி அரசு விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details