சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற இரண்டு ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோக்களில் முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் குறித்து நிதியமைச்சர் பேசுவது போன்று உள்ளது.
இந்த ஆடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாட்கள் பயணமாக இன்று(ஏப்.26) டெல்லி சென்றுள்ளார். இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து விஸ்தாரா பயணிகள் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.