சென்னை:இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் ஊக்கம் தரும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிண்டி ராஜ்பவனில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய குடிமைப்பணிக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்று தங்கள் கேள்விகளையும், குடிமைப்பணி குறித்த சந்தேகங்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் முதலில் மாணவர்களை அறிமுகம் செய்துகொள்ள அறிவுறுத்தி்னார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் பெயர், மாவட்டம், படிப்பு ஆகியவற்றைக் கூறி சுய அறிமுகம் செய்து கொண்டனர். மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு முடிக்கும் வரையில் நின்று கொண்டு கேட்டறிந்தார். அதன் பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கும் நின்று பதிலளித்தார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துப் பேசும்போது, “மின்சாரம் இல்லாத, சாலை இல்லாத சூழலில் பிறந்து வளர்ந்தேன். 8 கிலோ மீட்டர் கடந்து பள்ளி சென்று படித்தேன். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளைக் கடந்து செல்லும் போது காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு கடந்துள்ளேன். பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவுவார்கள். என் சிறுவயதில் என் தந்தையை இழந்தேன். என் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது.
ஆனால், அப்போது அந்த காலகட்டம் கடினமானதென நான் நினைக்கவில்லை. இப்போது தான் அவை சற்று கடினமானதாகத் தெரிகிறது. முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை கூட விடுதி அறையில் மின்விசிறி இருந்ததில்லை. மரத்தின் இலைகளை விசிறியாகப் பயன்படுத்தியதும் உண்டு. அதெல்லாம் அப்போது மிகவும் வசதியானதாகப் பார்க்கப்பட்டது. என் கனவு Astro physicistஆவதாக இருந்தது. ஆனால், வாழ்க்கை என் பாதையை மாற்றியது.
குடிமைப் பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். சில வேளைகளில் தவறாகக் கூட முடிவுகள் எடுக்க நேரிடலாம். நானும் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது. இல்லையெனில், நீங்கள் தகுதியற்றவராகிவிடுவீர்கள். திருக்குறள் படித்து நான் உத்வேகம் அடைந்தேன். இரண்டு வரிகளில் கருத்துகள் உள்ளன. தமிழ் மிக அற்புதமான படைப்புகளைக் கொண்டுள்ளது. திருக்குறளில் பல ஆழமான கருத்துகள் உள்ளன. தமிழ் மொழியின் மிகப்பெரிய சொத்து, திருக்குறள்.
ஆனால், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும் அதன் ஆழமான கருத்துகளை முழுமையாக கூற முடியவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியமாகியது. வெறும் பட்டங்களுக்காக வேலை கிடைக்கும் நிலை இப்போது இல்லை. செயல் திறன் , அறிவுத்திறன், சிந்தனை அனைத்தையும் கருத்தில்கொண்டு தான் இப்போது வேலை கிடைக்கிறது. கடினமான நிலையிலும் சிந்திக்கும் திறன்களையும் அதிகரிக்கும் வகையிலேயே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நமது பொருளாதாரத்தை குலைக்க நினைத்தால் பயங்கரவாதத்தைக் கையில் எடுப்பார்கள். அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இல்லை. அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள் பலனளிக்க ஆரம்பித்தன. சர்வதேச ஒத்துழைப்புக்கு மிகுந்த உழைப்புத்தேவை. 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை உலகம் முக்கியமாக கருதவில்லை. ஆனால், இன்று சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஏதாவது கூறினால் அது கவனத்தைப் பெறுகிறது.
ஐக்கிய நாடுகளை விட ஜி 20 பலம் மிக்க அமைப்பாகும். அந்த அமைப்பில் உலகுக்கு வழிகாட்ட இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.
நாகாலாந்து வாழ்க்கை: “நாங்கள் இந்தியர்கள் அல்ல, தனி நாடு வேண்டும் என கேட்ட நாகா மக்களுடன் தொடர்ந்து பேசினேன். 2 ஆயிரம் கிராமத் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எந்தவித காவலும் இல்லாமல் அவர்கள் வீடுகளில் தங்கி, உறங்கி நண்பர்களாகத் தொடர்ந்து பேசினேன். அவர்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டனர். மரபுசார எரிசக்தி (Green Energy) நோக்கி நாம் நகர வேண்டும்.