சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் பிற சங்கங்களின் ஊழியர்களை வைத்து பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை கேகே நகர் பணிமனையில் உள்ள 140 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது என அதன் கிளை மேலாளர் தெரிவித்தார்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்கத்தின் இணைச் செயலாளர் அன்பழகன் கூறும்போது, "வேலை நிறுத்த போராட்டத்தில் பெருவாரியான ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று அரசுப் பேருந்துகள் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச மற்றும் வெளியில் இருந்து வந்த பணியாளர்களை வைத்து இயக்கப்படுகின்றன.
தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையின்போது கடைசி நேரத்தில் மிக குறைந்தபட்சமாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை இந்த மாதம் உயர்த்தி கொடுங்கள் என்றும், தற்போது பணியில் உள்ள பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது போல் தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும், இந்த நான்கு மாதத்திற்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கவில்லை. குறைந்தபட்ச இரண்டு கோரிக்கைகளை கூட அரசு ஏற்காமல், போக்குவரத்துத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் தள்ளி உள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை நாங்கள் சட்டப்படியாக மேற்கொள்வோம். ஊதிய உயர்வு போன்றவைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த போது மு.க.ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது எம்எல்ஏக்களுக்கான சம்பள உயர்வை நாங்கள் ஏற்க மாட்டோம் என வெளியில் வந்து போராட்டத்தை நடத்தினார்.