தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. ரெனால்ட் நிஸ்ஸான் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! - TN Govt signed with rosen nissan group

ரெனால்ட் நிஸ்ஸான்(Renault Nissan) குழுமத்துடன் தமிழ்நாடு அரசு 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரேனால்ட் நிஸ்ஸான் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
ரேனால்ட் நிஸ்ஸான் குழுமத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

By

Published : Feb 13, 2023, 2:15 PM IST

சென்னை:பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030 -2031ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RNAIPL) என்பது ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸ்ஸான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

2008ஆம் ஆண்டு பிப்ரவரியில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2007 - 2008ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் 4,80,000 கார்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அதிநவீன பயணிகள் வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது.

இந்த ஆலை 2010ஆம் ஆண்டில் தனது உற்பத்தியைத் தொடங்கியது. ரெனால்ட் நிஸ்ஸான் தொழில் நுட்ப மற்றும் வர்த்தக மையம் (RNTBCI) என்பது, உலக அளவில் இக்குழுமத்திற்கான தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் ஒரு அமைப்பாகும். 2007ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள இந்த பிரத்யேக தொழில் நுட்ப மற்றும் வர்த்தக மையம், 8,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

ரெனால்ட் நிஸ்ஸான் குழுமம் இந்த வசதிகளில் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில் 7,000 நபர்களுக்கும், தொழில் நுட்பம் மற்றும் வணிக மையத்தில் 8,000 நபர்களுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது மட்டுமின்றி, பொறியியல் மையங்கள், உற்பத்தி திட்டங்கள், விற்பனை நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான நிதி உதவி ஆகியவற்றில் இக்குழுமம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் சுமார் 16,000 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். அவற்றில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புரிந்துணர்வு ஒப்பந்தம், தற்போது ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது முழு உற்பத்தித் திறனான 4.80 லட்சம் கார்கள் உற்பத்தியில், 2 லட்சம் கார்கள் அளவிற்குத்தான் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.

RNAIPL மற்றும் RNTBCI ஆகிய நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன் வந்துள்ளன. தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தித் திறன் பயன்பாட்டை 2லட்சம் கார்களிலிருந்து 4 இலட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக, 3,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பாஜகவின் குழப்பமான ஆதரவு அதிமுகவிற்கு பயன் தராது - கனிமொழி எம்.பி

ABOUT THE AUTHOR

...view details