சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்விற்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டது. புதியதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் அதிகளவிலான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. 2018 - 19 ஆம் கல்வியாண்டில் 14 ஆயிரத்து 929 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 583 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
இருப்பினும் தேர்ச்சியடைந்தவர்களில் ஒரு மாணவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இதே போன்று 2019 - 20 ஆம் கல்வியாண்டில் 6 ஆயிரத்து 692 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 633 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர்.
பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால், 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு 2,675 பேர் தேர்ச்சி
இந்நிலையில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 10 ஆயிரத்து 853 பேர் தேர்ழுதினர். தற்போது இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்து 709 பேர், அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 966 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 675 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.