சென்னை:தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐ.எப்.எஸ்) அலுவலர்கள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்யச்சென்ற குழு அறிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் சீமைக் கருவேல மரங்கள் இயந்திரங்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்படுவதாகவும், இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்வதாகவும், சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.