சென்னை: தமிழ்நாட்டில் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு குவாரி, சுரங்க பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதன் பேரில் இத்தளர்வு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ’தேர்தலுக்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, இதே போல தான் சுற்றுச்சூழல் விவகாரத்திலும் திமுக முன்னுக்கு பின் முரணான செயல்களில் ஈடுபட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் வனப்பகுதி காப்புக்காடு தேசிய பூங்கா வன உயிரின காப்பகங்கள் சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மணல் கல்குவாரி போன்றவை செயல் படுவதற்கு தடை விதிப்பதாக, 2021ஆம் ஆண்டு நவம்பரில் உத்தரவிடப்பட்டது. இதனால் காடுகள் மற்றும் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் கல்குவாரி கிரஷர் போன்றவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, அப்போது அரசு தெரிவித்தது. இந்நிலையில், அந்த தடையை காப்புக்காடுகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், “புவியியல் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை வழங்கிய பரிந்துரை அடிப்படையில் காப்புக்காடுகளை ஒட்டி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுரங்கங்கள் பாவிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மட்டும், நீக்கப்படுகிறது. ஆனால் தேசிய பூங்கா மற்றும் வன காப்பகங்கள் ஒட்டிய பகுதிகள் தடை நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளது
இந்த முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி. சுந்தர்ராஜன் தனது ட்விட்டர் தளத்தில், "காப்பு காடுகளை சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் குவாரிகள், சுரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டுதான் இதற்கான தடையே விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விளக்களிப்பது விபரீதமான முடிவாகும்", என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அறநிலைத்துறையிடம் இருந்து கோயில்களை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது? - தருமபுரம் ஆதீனம் கேள்வி