கரோனா வைரஸ் தாக்குதலுக்கான லேசான அறிகுறியுடன் உள்ளவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அல்லது வீடுகள், வீட்டு பாரமரிப்பு வசதிகளில் உள்ளவர்கள் , கரோனா நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களின் மருத்துவக்கழிவுகளை தனியாக பிரித்து, மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
பொது மக்கள், கரோனா வைரஸ் நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக்கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.