சென்னை: சென்னை அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையின் மூலம் அளிக்கப்பட்ட, உயிர் காக்கும் மயக்க மருத்துவம் (LSAS-Life Saving Anaesthetic Skills), பேறுகால அவசர சிகிச்சை (EMOC-Emergency Maternal Obstetric Care) மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகிய 6 மாதகால பயிற்சிகளை நிறைவு செய்த 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்குப் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, சான்றிதழை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான மாநாட்டில், மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அலுவலர்களுடனான சந்திப்பின் போது, இரு மாநில மருத்துவர்களுக்கு இடையேயான மருத்துவப் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகாலாயா அரசு மருத்துவர்களின் பயிற்சிக்கு, தமிழ்நாடு அரசுடன் மேகாலாயா அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை, அல்ட்ராசவுண்ட் ஆகிய பயிற்சிகள் 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு இன்று முடிவடைந்துள்ளது. பயிற்சி முடித்துள்ள 29 மேகாலயா மருத்துவ அலுவலர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.