வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது தேர்தல் தருணத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை வைத்து சாதித்துக் காட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களாக பாமக சார்பாக உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி பல்வேறு ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு மணி நேரம் முன்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் அதிமுக - பாமக கூட்டணி உறுதி என்றும் கூறலாம்.
இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் கே.வெங்கடரமணன் தெரிவிக்கையில்," வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உள் ஒதுக்கீட்டை மற்ற பிரிவினர் எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொருத்தே இதில் கருத்து சொல்ல முடியும். வட தமிழ்நாடு குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் நிச்சயம் இந்த அறிவிப்பு அதிமுக-விற்கு உதவும். ஆனால் இது வேறு விதமாக தேர்தல் நேரத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, "40 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. ஆனந்த கண்ணீர்" என்று உணர்வுபூர்வமாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: பாமகவினர் கொண்டாட்டம்