இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கிக் கணக்கில் இருந்து, கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுவதை நிறுத்தி, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஓய்வூதிய வங்கிக் கணக்குகளில் ஆறு மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகளை அரசு முடக்கவுள்ளதாக தகவல் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி, " ஆறு மாத காலம் பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகளை முடக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அப்படியான எந்த உத்தரவும் இதுவரை இடப்படவில்லை. ஓய்வூதிய வங்கிக் கணக்குகளில் ஆறு மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.