சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில், சிறு, குறு தொழில்நிறுவனங்களின் பாதிப்பை சரி செய்யும் வகையில் பல்வேறு தளர்வுகள் மற்றும் சலுகைகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் ரூ. 20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது, அவர்களுக்கு முன்னதாக வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதிதாய் தொடங்கிய, தொடங்கவுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரசு துறையில் டெண்டர் கோரும் போது முன்வைப்புத்தொகை வைக்க தேவையில்லை என்றும், வருடத்திற்கு குறிப்பட்ட தொகை வருமானம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும், டெண்டருக்கான தொகை கட்ட தேவையில்லை என்றும், தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டிஎன் (STARTUP TN) முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது எனவும் உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்