தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தற்கொலைகள் தொடர்கதையாகும் ஐஐடியில், மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஐஐடி நிர்வாகமும், அதனை நடத்தும் மத்திய அரசும் இதற்கு பதில் கூற வேண்டும். கல்வி பயிலும் இடத்தில் தற்கொலைக்கான காரணம் என்ன?, எந்தவிதமான துன்புறுத்தல்கள் அங்கு நடக்கின்றன?, தற்கொலை செய்யும் அளவிற்கு இளம் தலைமுறைகள் ஏன் செல்கிறார்கள்? என்பது குறித்தும் நாம் ஆராய வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் ஆணையச் செயலாளரை மாற்றுவதென்பது உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிரானது. அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். என்னுடைய சந்தேகமெல்லாம், தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏதாவது பிரச்னை வராதா என அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.