தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம் - Tamilnadu government Introduce Direct subsidy for equipment used by handicapped people

மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம்

By

Published : Mar 27, 2022, 9:17 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வழிகாட்டுதலில், புதிய முன் எடுப்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியினை தாங்களே தேர்வு செய்து வழங்கும் உபகரணங்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

’இந்தியாவிலேயே முதல் முறையாக..!’:மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான உதவி உபகரணங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியினை தாங்களே தேர்வு செய்து வழங்கும் உபகரணங்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தினை 2021 – 22 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தும் விதமாக அரசாணை கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிதியாண்டில் ரூ.9.50 கோடி மதிப்பில், முதற்கட்டமாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான 7,219 உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்:

1. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உபகரணங்களுக்கு பதிலாக, அவர்களே தங்களுக்குத் தேவையான மாதிரி உபகரணங்களைத் தெரிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யும் மாதிரி உபகரணத்திற்குத் தேவையான கூடுதல் தொகையை, அவர்களின் பங்களிப்புத் தொகையாக, அவர்களோ அல்லது கொடையாளரோ/ கொடை நிறுவனம் மூலமாக வழங்கினால், அவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

3. இப்புதிய திட்டத்தில் முதற்கட்டமாக சேர்க்கப்பட்டுள்ள 5 உபகரணங்களில் மொத்தம் 36 மாதிரிகள் தகுந்த தொழில் நுட்ப வல்லுநர்களின் பரிந்துரைகளின்படி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் மூலமாக உரிய விதிகளின்படி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விருப்பத் தேர்வு முறை மூலம் பயனாளிகள் தங்களுக்கு வேண்டிய உபகரணங்களை தேர்வு செய்து கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது.

4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் மூலமாக, பயனாளிகள் விருப்பத் தேர்வு முறை மூலம் தங்களுக்கு வேண்டிய உபகரணங்களின் மாதிரியினை தேர்வு செய்யும் வாய்ப்பினை பெற்றனர்.

5. இது நாள் வரை ரூ.9.50 கோடி மதிப்பில், மாற்றுத்திறனாளிகளால் இத்திட்டத்தின் மூலம் கோரப்பட்ட அறுதியிட்ட வகை உபகரணங்கள் 6,665ம் சேர்த்து மொத்தம் 7,219 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறவுள்ளனர். மேற்குறிப்பிட்ட உபகரணங்களுடன் 2021 – 22 ஆம் நிதியாண்டில் ரூ.70.08 கோடி செலவில், 24 வகையான உதவி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சுமார் 37,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:நவீன காலத்திலும் தரம் மாறாத காரமடை கை முறுக்கு.. புவிசார் குறியீடு கிடைக்குமா..?


For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details