தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - aavin milk

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

By

Published : Nov 4, 2022, 9:58 AM IST

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான இடு பொருட்களான கலப்புத் தீவனத்தையும் மற்றும் கால்நடைமருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக வழங்கி வருகிறது.

கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.32/-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.41/-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.3/- குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும். இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து இடுபொருட்களின் விலை உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததையும், கிராமப்பொருளாதார முன்னேற்றத்தில் பால் உற்பத்தியளார்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூபாய்.32/-லிருந்து ரூபாய் 35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூபாய்.41/-லிருந்து ரூபாய்.44 ஆகவும் 05.11.2022 தேதியிலிருந்து வழங்கப்படும்.

மேற்கூறிய கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம்பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில், கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஆகிய இரண்டையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும், நுகர்வோர் நலன் கருதி, இல்லங்களில் நுகர்வோர் பயன்படுத்தும் சமன்படுத்தப்பட்டபால் (Toned Milk) (நீலவண்ண பாக்கெட்டில் வழங்கப்படுவது) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) (பச்சைவண்ண பாக்கெட்டில் வழங்கப்படுவது) ஆகியவற்றின் விலையில் எவ்விதமாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.

நிறைகொழுப்புப்பாலைப் பொறுத்தவரையில், நுகர்வோர் வாங்கும் பாலின் விலை உயர்த்தப்படாமல் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் இப்பாலின் விலை மட்டும் ஆவின் நிறுவனத்தால் மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு நுகர்வோருக்கான விற்பனை விலை உயர்த்தப்படாமல் பாலின் கொள்முதல் விலை மட்டும் உயர்த்தப்படுவதால், ஆவின் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஏற்படும் கூடுதல் நிதித்தேவையானது, தமிழ்நாடு அரசின் உதவி மூலமாகவும் ஆவின் நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டின் மூலமாகவும் நிறைவு செய்யப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன், கிராமப் பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்கிட ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details