ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்ட இயக்குநர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து 500 கோடி ரூபாயும், அவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியாக 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டது.
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், குடியிருப்புத் திட்டங்களான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இதர சாலைப் பணிகள் திட்டம் போன்ற பல்வேறு பணிகளிலுள்ள முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.