தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 14, 2020, 10:17 AM IST

Updated : May 14, 2020, 9:36 PM IST

ETV Bharat / state

டாஸ்மாக் மூடக்கோரிய வழக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

chennai high court
chennai high court

10:05 May 14

சென்னை: மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கில் தமிழ்நாடு உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வுக்குப் பின், மே 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை திறக்க அரசு நிபந்தனைகளுடன் சேர்த்து, மேலும் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.

பின்னர், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ்குமார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஆன்லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. 

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற பகுதிகளில், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  

இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

மதுபானம் விற்பனை செய்வதற்கு ஆதார் விவரங்களைக் கேட்பது என்பது தனி நபர் உரிமையை மீறிய செயல். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஒரே இரவில் அதனை மேற்கொள்ள முடியாது.  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5ஆயிரத்து 338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக பணம் பெறும் வசதி உள்ளது. 

இந்தக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில்,  செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.  டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு

Last Updated : May 14, 2020, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details