சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, பாமக, மதிமுக உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
இந்த சட்ட மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு ஊழியர்களும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு இன்று(ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறாண்டாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளான 8 மணி நேர வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், சமூகப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்றவற்றை ஒழித்து 12 மணி நேர வேலை, ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயித்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது, ஒப்பந்த வேலை முறை போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்திருத்தங்களை கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 40 நொடிகளில் நிறைவேற்றி இருக்கிறது திமுக அரசு.
இதன் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து மே தின பரிசு கொடுத்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பாஜக அல்லாத வேறு எந்த மாநிலங்களிலும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்ட திருத்தம் 65ஏ-வை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதன் மூலம் மோடியின் வழியில் அவரையும் முந்தி நடை போட ஆரம்பித்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர்.
இந்த ஆட்சியை திராவிட மாயை ஆட்சி என்று சொல்வதைத் தவிர, வேறென்ன செய்வது. இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களையும், திட்டங்களையும் நீங்களே விலக்கிக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட்களின் சேவகனாக இருப்பதை விட அரசு ஊழியர் தொழிலாளர்களின் நாயகனாக இருக்கப் பாருங்கள். நீங்கள் மாறாவிட்டால் உங்களை மாற்றம் செய்யும் வேலைகளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தொழிலாளர்களும் மேற்கொள்ள வேண்டி வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஆசிரியர் கூட்டமைப்பான ஐபெட்டோவின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 1 தொழிலாளர் தினம். உலகம் முழுவதிலும் கொண்டாடுகின்ற நாளில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக ஆபத்தான தொழிலாளர் விரோதச் சட்டத் திருத்தங்களை தமிழக சட்டசபையில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த 65ஏ சட்டத் திருத்தத்தில், வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது, வாழ முடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது, தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது, நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன.